சனி, 20 அக்டோபர், 2012

அதிசயம்!.... ஆனால் உண்மை!! : சென்னையில் "வக்ப்" வாரிய சொத்து மீட்பு!



                     சென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய "வக்ப்" சொத்துக்கள் உள்ளன.

இதில், 90% சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வேதனை என்னவென்றால், இந்த சொத்துக்களை மீட்பதற்காக ஆங்காங்கே உள்ள "உள்ளூர் மக்கள்" முயற்ச்சித்தாலும் -ஆக்கிரமிப்பாளர்களே அசைந்து கொடுக்க முற்பட்டாலும், "வக்ப் வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழலின் ஊற்றுக்கண்களாக செயல்படும் அதிகாரிகள்" பெரும் தொகையை "கையூட்டு" பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, நேரடியாகவே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு சட்டரீதியான (குறுக்கு வழிகள் குறித்த) ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவர்.

அந்த அளவிற்கு, வக்ப் வாரியத்தில் "லஞ்சம்" தலை விரித்தாடுகிறது.

இதில், ஓரிரு அதிகாரிகள் மட்டும் விதி விலக்காக இருக்கலாம்.

தற்போது, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள 2 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டது.

அங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடிக் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அந்தக் கட்டடத்தை இடித்து, வேலி அமைக்கும் பணி செவ்வாய்கிழமை (16/10) நடைபெற்றது.

இந்த இடத்தை "திமுக பிரமுகர்" ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், முதன்மைச் செயலர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

"அ.தி.மு.க"வை சேர்ந்த "எம்.ஜி.ஆர். ரசிகர்" மன்றத்தலைவரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டது,பாராட்டுக்கு உரியது.

இதே ஐஸ் ஹவுஸ் பகுதியில் மட்டும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 27 கிரவுண்ட் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

அவை அனைத்தையும் முறையான முயற்சிகள் மூலம் மீட்கப்பட வேண்டும், என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து தமிழ்மகன் உசேன் குறிப்பிடும்போது, முதல் கட்டமாக சென்னையில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வக்பு வாரிய இடங்களும் மீட்கப்படும்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்படும் என்றார்.


நன்றி - maruppu.in