வியாழன், 7 ஜூன், 2012அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச்சர் விஜய் வாக்குறுதி


                  
               அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவசர சிகிச்சை வார்டில் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், அனைத்து அரசு
மருத்துவமனைகளில், சிசி "டிவி' கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர், சென்னை அரச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, பணியிலிருந்த முதுநிலை மருத்துவருடன் தகராறு ஏற்பட்டது. வழக்கறிஞர் குழுவினர் அம்மருத்துவரை தாக்க முனைந்தனர். இச்செயலை கண்டித்தும், உடனடியாக குறித்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும், அரசு மருத்துவமனை முது நிலை பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில், முதுகலை மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக வந்திருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய், திருச்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையறிந்த, பயிற்சி மருத்துவர்கள் சங்க தலைவர் சைமன், அருண் மற்றும் மருத்துவப் படிப்பு மாணவர்கள் அமைச்சர் விஜயை சந்தித்தனர். அப்போது, "புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்ததும், உங்கள் பிரச்னையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும'' அமைச்சர் விஜய் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்புவதாக கூறியுள்ளனர்.

பின், அமைச்சர் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது : பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவசர சிகிச்சை, பிரசவ வார்டுகளில், 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சிசி "டிவி' கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.