செவ்வாய், 5 ஜூன், 2012

மறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி :



இணையத்தளத்தில் சாதாரணமாக நடத்தப்படும் ஒரு கருத்துக்கணிப்பில் பல மில்லியன் மக்கள் வாக்களித்திருக்க முடியுமா?
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கருத்துக்கணிப்பு எனில் அது நிச்சயம் சாத்தியமென நிரூபித்திருக்கிறது Radio Times.

அமெரிக்காவின் ஆஸ்காருக்கு சமமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் BAFTA விருதுகளுக்காக (British Academy of Film and Television Arts) இம்முறை பரிந்துரைக்கப்பட்ட இரு முக்கிய தொலைக்காட்சி ஆவணத்திரைபடங்கள்

1. சேனல் 4 இன் Sri Lanka's Killing Field
2. அல் ஜசீராவின் Bharain : Shouting in the Dark

இதில் சேனல் 4 இன் Sri Lanka's Killing Field - இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்டுவந்த சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இலங்கை அரசு இறுதியாக மேற்கொண்ட வழி என்ன என்பதை சாட்சிப்படுத்தியது. நம்மில் பலர் இத்திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த திரைப்படத்தை பற்றிப் பார்க்கலாம்.

அல்ஜசீராவின் Bharain : Shouting in the Dark -  துனிசியா, எகிப்து, லிபியா என மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சி மூலம், புதிய வரலாறு படைத்து வர,  அம்முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள  கடும் முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன Bahrain நாட்டை பற்றியது.

ஆக்ரோஷமாக உருவெடுத்த பஹ்ரேய்ன் மக்கள் புரட்சி எப்படி அதைவிட ஆக்ரோஷமாக அடக்கப்பட்டது என்பதை படம்பிடிக்க தவறிய மேற்குலக கமெராக்கள் மத்தியில் அல்ஜெசிரா சரியாக படம்பிடித்து கொண்டது. பயன்படுத்தியும் கொண்டது.

இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் யூடியூப்பில் 200,000 ஹிட்ஸ் குவிந்தன.  கட்டாருடன் (அல் ஜசீராவின் தலைமையகம் அமைந்துள்ள நாடு) தனது உறவை முறித்து கொள்ளும் அளவுக்கு பஹ்ரேன் அரசுக்கு கடுப்பேற்றிய டாக்குமெண்டரி இது. இதில் சாட்சியமளித்த பலர் இத்திரைப்படம் வெளியான பின்னர் கைது செய்யப்பட்டு இப்போதும் சிறைக்குள் உள்ளார்கள்.

ஆனால் குறித்த இரு திரைப்படங்களுமே,  ஊடக சக்தியை சிறைப்படுத்த முடியாதவை என நிரூபித்தவை.

Sri Lanka's Killing Field & Bahrain : Shouting in the Dark இவற்றில் எதை BAFTA விருதுக்கு எதை பரிந்துரைப்பீர்கள்? என்பது தான் Radio Times நடத்திய கருத்துக்கணிப்பு.
மொத்தம் 7,783,000 வாக்குகள் இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தன. இதில் Bahrain : Shouting in the Dark திரைப்படத்திற்கு 63% வாக்குகளும், Sri Lanka's Killing Field க்கு 37% வீத வாக்குகளும் கிடைத்தன.  Radio Times இல் ஒரு கருத்துக்கணிப்புக்கு 7 மில்லியன் பேர் வாக்களித்தது இதுவே முதன்முறை.

ஆனால் இரு படங்களையுமே  Bafta நடுவர் குழு விருதுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. நாம் நடத்துவது வாக்கெடுப்பு மட்டுமே. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என Radio Times முன்னரே அறிவித்திருந்தது.

இலங்கை, பஹ்ரேய்ன் இரு நாடுகளாலும் BAFTA விற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் இரு திரைப்படங்களுக்கும் இருந்த எதிர் விமர்சனங்கள் தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியாயின் விருதை வென்ற திரைப்படமெது?

பிபிசியின் Panroma வகை புலனாய்வு திரைப்படமான Undercover Care - The Abuse Exposed

பிரிட்டனின் விண்டர்போர்னே நகரில் உள்ள மருத்துவமனையில் கடுமையாக உடல் ஊனமுற்ற மற்றும் மிக பலவீனமான நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு மருத்துவ பணியாளர்களாக சேவை செய்பவர்களினால் இந்நோயாளிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனை, இரகசிய கமெராக்கள் மூலம் படம்பிடித்து உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.

மேற்குறிப்பிட்ட மூன்று ஆவணத்திரைப்படங்களும் BAFTA விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை என்பதற்காக மாத்திரமல்ல. மனிதத்தை நேசிக்கும் எவரும் ஒருமுறையேனும் பார்த்திருக்க வேண்டியவை என்ற ரீதியில் இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்.

(எச்சரிக்கை : மூன்று திரைப்படங்களுமே இதயம் பலவீனமானவர்களுக்கு, 18 வயதுக்குட்பட்டோருக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததல்ல)

Sri Lanka's Killing Field


  Bahrain : Shouting in the Dark


 Panorama Undercover Care, The Abuse Exposed




                                                                                                                      - ஸாரா