சனி, 9 ஜூன், 2012

நவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள்

                

  தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக் கைதிகளுக்கு பொருட்களின் தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்றை தமிழக சிறைத்துறை முன்வைத்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக முதல்வரும் அனுமதி வழங்கிவிட்டார் என்பதே சிறைத்துறை அதிகாரிகளின் தற்போதைய சந்தோஷம். சிறைகளின் நிலைமைகளை படிப்படியாக மாற்றும் புதிய பார்வை கொண்டுள்ள தமிழக முதல்வர் அனைத்து முயற்சிகளுக்கும் தாராளமாக உதவிவருகிறார் என்கிறார் கூடுதல் காவல்துறை இயக்குனர் [சிறைத்துறை] எஸ்.கே.டோக்ரா.
ஜவுளி, தோல், சலவைக்கட்டி, புத்தகங்கள் அடுமனை [பெகேரி] உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சிறைக்கைதிகள் தயாரித்துக் கொடுக்கின்றனர்.காவல்துறை மற்றும் சில அரசு நிறுவனங்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த தயாரிப்பு பொருட்களை அதன் தரம், இனம், எண்ணிக்கையை அதிகரித்து வெளிச்சந்தைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.இத்திட்டத்திற்கு பிரிசியன் பஜார் என்று பெயரிட்டுள்ளனர்.பிரீடோம் என்ற முத்திரையுடன் சிறைத்தயாரிப்பு பொருட்கள் சில்லறை விற்பனைக்கு வர இருக்கின்றன. மற்ற கம்பெனி தயாரிப்புகளை விடவும் இதன் விலை குறைவாக இருக்குமாம். போட்டியை எதிர்கொள்ள இந்த விலை குறைப்பு என்றாலும் அதன் தரத்தில் குறைவிருக்காது என்கின்றனர் அதிகாரிகள். சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிச்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதில் சிக்கல் இருக்காது என்று கூறும் எ.டி.ஜி.பி.டோக்ரா, தயாரிப்பு பொருட்களின் தரத்தை உயர்த்த ஆய்வுகள் நடத்தப் படுகின்றன என்கிறார்.
கைதிகளில் பலர் அதிக திறமை உடையவர்கள்.சிறைச்சாலைகளில் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாவிட்டால் எதிர்கால நம்பிக்கையுடன் தொடர்ந்து வேலை செய்யலாம்.தயாரிப்பு முறைகளில் நவீன தொழிற்நுட்பத்தை அவர்கள் கற்றுக் கொள்வதால், விடுதலையாகி சமூக வாழ்க்கைக்கு திரும்பும் போது அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ முடியும்.
சிறைவாசிகளுக்கு நவீன தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு சிறந்த பயிற்சியாளர்களை காவல்துறை தேடுகிறது. சமூகத்தை சீர்திருத்தும் நோக்கத்தில் சிறைகளில் பொருட்களை தயாரிப்பு செய்ய விரும்பும் அமைப்புகளோடு ஒப்பந்தமிட சிறைத்துறை தயாராக உள்ளது.இந்த தயாரிப்புகளை விற்பனை செய்து ஈட்டும் வருவாயில் ஒரு பகுதி அவர்கள் பெயரில் சேமிக்கப்படும்.சிறைகளை சீர்திருத்தம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பிரிசன் பஜார் என்கிறார் எ.டி.ஜி.பி.டோக்ரா. சிறையில் கிடைக்கும் மனிதர்களையும், நேரங்களையும் அரசு பயனுள்ளதாக்கிக் கொள்ளமுடியும். நல்லத்திட்டம், வெற்றிபெற வாழ்த்துக்கள்.