கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

வால்மீகி
இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்... எண்பது
மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம்
கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு
முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று
எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே
இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர,
நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக்
கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள்
வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான்.
நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்.... சூர்ப்பனகை இங்கு வருகிறாள்,
அவள் தாக்கப்பட்ட பிறகு, இராவணன் இங்கு வருகிறான். சூர்ப்பனகை, இராவணன்,
அனுமன் ஆகிய இவர்கள் அனைவரும் ராமன் பாலம் கட்டும் முன்பே பாலம் இல்லாமலேயே
போகிறார்கள் - வருகிறார்கள் என்கிறபோது, கடவுள் அவதாரம்(?) இராமனுக்கு
மட்டும் எதற்குப் பாலம்?
இராமாயணக் கதைப்படி, லட்சுமணன் மற்றும்
போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களை பிழைக்க வைப்பதற்காக
இந்தியாவி லுள்ள சஞ்சீவி வேர் தேவைப்படுகிறது. பறந்து வந்த அனுமனுக்கு
சஞ்சீவி வேர் எதுவென்று தெரியாத தால், சஞ்சீவி மலையையே தூக்கிச் சென்று
விடுகிறான். அதன் மருத்துவ சக்தியால் இராமனின் படையினர்
உயிர்த்தெழுந்தார்கள் என்று இராமாயணம் கூறுகிறது. மீண்டும் அந்த மலையை
இங்கு கொண்டு வந்து விட்டால் இங்கு உள்ள நோய்களையெல்லாம் தீர்த்துவிடலாம்
அல்லவா? எனவே இராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடுகிற இந்து
முன்னணி போன்றவர்கள் எல்லாம், முதலில் அந்த சஞ்சீவி மலையை தேடி
கண்டுபிடித்து அதை மீட்பதற்காக போராட்டம் நடத்தலாமே?
வலசை
நீரோட்டம், இடசை நீரோட்டம் என்று சொல்வார்கள். அதாவது கடிகார முள் ஓடும்
திசை, அதற்கு எதிர் திசை. கடலுக்கு அடியில் ஓடுகிற நீரோட்டங்கள் மூன்று
மாதம் வலப் பக்கமாகவும், மூன்று மாதம் இடப் பக்கமாகவும் ஓடுகிறபோது
இயற்கையாக ஏற்படுவது தான் மணற்திட்டு. இது உலகம் முழுவதும் பல இடங்களில்
காணப்படுகிறது. முதல் மட்டம் பவளப் பாறைகளாகவும், அதற்கு மேல் சுண்ணாம்பு
பாறைகளாகவும், அதற்கு மேல் மணலாகவும் மூன்று மட்டங்கள் இருப்பதாகவும், இவை
நீரோட்டங்களால் இயற்கையாக உருவானவை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.