புதன், 27 ஜூன், 2012

காஷ்மீர் விவகாரம்: மத்திய சிறப்பு சட்டங்கள் மறு ஆய்வு! மத்திய ஆய்வுக்குழு அறிக்கை


     
                   காஷ்மீரின் சமூக அரசியல் சூழல்களை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசு மூவர் குழுவை 2010ல் அமைத்தது. சரியாக ஒரே ஆண்டில் (அக்டோபர் 12, 2011) அக்குழு தனது அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்ப்பித்தது. சுமார் ஆறு மாதங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் அவ்வறிக்கையை மே 24, 2012 அன்று வெளியிட்டது.
திலீப் பட்கவுன்கர் (பத்திரிக்கையாளர்), ராதாகுமார் (கல்வியாளர்), எம்.எம்.அன்சாரி (முன்னாள் தகவல் ஆணையர்) ஆகியோர் காஷ்மீரின் நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளனர். நாடாளுமன்றத்தின் நிதி அறிக்கை தொடர் முடிவுற்ற இரண்டு நாள் கழித்து இந்த அறிக்கை விவாதத்திற்கு விடப்பட்டது. அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடந்துகொண்டிருந்தது. மே 24ஆம் தேதி, இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையானது, குழுவினது சொந்த கருத்து, அதன்மீது அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, இதன் கருத்துக்கள் மீதான விவாதம் வரவேற்கப்படுகிறது என்கிறார் உள்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.

ஜம்மு-காஷ்மீரின் அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், போராட்ட அமைப்புகள் என அனைத்துப் பிரிவினருடனும் இக்குழுவினர் விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளனர். 1952ல் ஜம்மு-காஷ்மீருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அங்கு பல ஆண்டுகளாக அமுலில் இருந்துவரும் மத்திய அரசு சட்டங்கள் மற்றும் இந்திய சாசன சட்ட விதிகள் அனைத்தையும் மீளாய்வு செய்ய மத்திய குழு (Constitution Committee) ஒன்றை அமைக்க வேண்டுமென மூவர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. 1953ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டுவரத் தேவையில்லை, கடிகாரம் திருப்பிச் சுற்றுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால், 1953ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த உரிமைகள் வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். காஷ்மீர் சட்டமன்றத்திலேயே அதற்கான தீர்மானமும் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஷ்மீருக்கு சிறப்புரிமைச் சட்டம் 370 இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உரிமைகள் பல ஆண்டுகளாக படிப்படியாக மீறப்பட்டு விட்டன. இந்த விதி 370ஐ மறு மதிப்பீடு செய்யும் அவசியம் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சாசன சட்டத்தின் பகுதி 21 மற்றும் விதி 370ன் தலைப்புகளில் ‘தற்காலிகமானது’ (Temporary) என்று எழுதப்பட்டுள்ளதை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கான சிறப்பு விதி 371ன் தலைப்பில் உள்ளதைப் போன்று காஷ்மீரின் விதி 370க்கும் ‘சிறப்பானது’ (Special) என்று மாற்ற வேண்டும்.

விதி 370ஐ நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று கூறும் பட்கவுன்கர், நாங்கள் புதிதாக எதையும் கண்டு கூறவில்லை என்கிறார். விதி 371ன் கீழ் இந்திய அரசின் பல மாநிலங்கள் சிறப்பு சட்டங்கள் கொண்டவையாக இருக்கின்றன என்கிறார். உருது மொழியில் பெயரிடப்பட்டுள்ளதைப் போல் ஆளுனர் மற்றும் முதல்வர் என்பதை ஆங்கிலத்தில் Governor மற்றும் Chief Minister என்று இப்போதுள்ள நிலையிலேயே பெயரிட்டுக் கொள்ளலாம் என்றுள்ளது அறிக்கை.

1965 வரை, ஜம்மு காஷ்மீரின் முதல்வர், பிரதமர் (வாஸிர்-இ-ஆஜம்) என்றும் கவர்னர், ஜனாதிபதி (சாதர்-இ-ரியாஸத்) என்றும் அழைக்கப்பட்டனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாகவும் புதிய திட்டம் ஒன்றை குழு முன்வைத்துள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரே மாதிரியான ஹிμம்முறை பொருந்தாது என்றும் கூறுகிறது.

• அரசியல் ரீதியில், மத்திய-மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பு வேண்டும்,

• மாநிலத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,

• நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்,

• பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act); கலவரப் பகுதி சட்டம் (Disturbed Areas Act); ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) ஆகியவை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்,

• மத்திய அரசு மற்றும் ஹுரியத் அமைப்புக்கும் இடையே துரிதமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும், இந்தப் பேச்சுகள் மூலம் உணரத்தக்க விளைவுகள் காணப்பட வேண்டும், • சாசனக் குழு (Constitution Committee) வின் பரிந்துரைகள் மீதான விவாதத்தில் பாகிஸ்தான், பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஜம்மு-காஷ்மீர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,

• அரசுக்கும் ஹுரியத்துக்குமான பேச்சு வார்த்தையில் வெளிப்படும் விபரங்களும் சேர்க்கப்பட வேண்டும்,

• எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இருபு றமும் உள்ள மக்கள் இடையே உறவுகள் மேம்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் இடப்பட வேண்டும்,

• தீர்வுகள் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை சார்ந்திருக்கக் கூடாது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள வர்த்தகர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் பாகிஸ்தான் அதில் இணைந்துகொள்ள கதவு எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) அர்த்தமற்றதாக ஆக்குவதுதான் குறிக் கோளாக இருக்க வேண்டும். அது உடன்படிக்கை மற்றும் ஒத்துழைப்பின் சின்னமாக இருக்க வேண்டும்.

• பண்டிட்டுகள் உள்பட அனைத்து காஷ்மீரிகளும் காஷ்மீருக்குத் திரும்ப வேண்டும்,

• கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் ஆதரவற்ற காஷ்மீரிகள் திரும்புவதற் கான வழிகளை எளிமைப்படுத்த வேண்டும்,
• மறைக்கப்பட்ட படுகொலைகளை விசாரிக்க நீதி ஆணையம் அமைக்க வேண்டும். மனித உரிமைகளையும், சட்ட சீர்திருத்தங்களையும் வேகமாகக் கொண்டுவர வேண்டும்.

• ஜம்மு-காஷ்மீர்-லடாக் என மூன்று பிரிவுக்கும் மண்டல ஆட்சிக் குழுக்களை (Regional Councils) ஏற்படுத்த வேண்டும்.

• நாட்டின் உள் மற்றும் வெளிப்புறப் பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதார நலன்களுக்கும், குறிப்பாக ஆற்றல் மற்றும் நீர்வளங்களை ஈட்டுவதற்கும் தொடர்பில்லாத சட்டங்களை நாடாளுமன்றம் உருவாக்கக் கூடாது.

• மாநில அரசுக்கு தன்னாட்சிக்கான உரிமையை அதிகரிக்க வேண்டும், சட்டப்படியான நிறுவனங்களையும் அதிகப்படுத்த வேண்டும். அவைகளின் நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீரின் சாசன விதிகளுக்கு ஒத்திருக்க வேண்டும், அரசியல் தீர்வு காண்பதில் ஜம்மு-காஷ்மீர் அரசு மட்டுமே தலையிட வேண்டும்.

• மாநில அரசு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் மூன்று பெயர்களில் இருந்து ஒரு நபரை அவர் கவர்னராக நியமிப்பார். சாசன விதி 356ல் எந்த மாற்றமும் இல்லை. மாநில அரசு கலைக்கப்பட்டால் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,

• மத்திய அரசு நியமிக்கக்கூடிய அரசியல் சாசனக்குழு ஆறு மாதங்களில் தனது பணியை நிறைவு செய்ய வேண்டும். அதன் அறிக்கை நாடாளுமன்றத்திலும், ஜம்மு-காஷ்மீர் சட்டமன் றத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

• ஜம்மு-காஷ்மீர் என்கிற இரண்டு வெவ்வேறான சிறப்பியல்புகளையும், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதையும் விதி 370ன் கீழ் சிறப்பு அதிகாரங்களை அனுபவித்து வருகிறது என்பதையும், இந்தியாவின் குடிமக்கள் என்பதைப் போன்று காஷ்மீர் குடிமக்கள் என்கிற இரண்டு சிறப்பம்சங்களையும் அது கவனத்தில் கொள்ள வேண்டும்.

• அடுத்தது, விதி 370ன் கீழ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதும் சாசனக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான உத்த ரவிடுவதும் ஜனாதிபதி செய்யவேண்டிய பணி.
• பொருளாதாரத்தில் ஜம்மு-காஷ்மீரின் தன்னம்பிக்கையை மேம்படுத்த வேண்டும்,

• மத்திய மாநில அரசுக்கிடையே புதிதாக நிதி சார்ந்த ஒப்பந்தம் இடவேண்டும்,
• கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இருபுறமும் உள்ள பொதுமக்களும், பொருட்களும் எவ்வித இடையூறுமின்றி தாராளமாகச் சென்றுவருவது உள்ளிட்ட இருபுற மக்களுக்கும் இடையே உறவுகளை இணைக்க இந்தியா -பாகிஸ்தானிடையே ஒப்பந்தமிட வேண்டும்.

குடிநீர், பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பொதுநலன்கள் சார்ந்த பிரச்சனைகளில் இருபுறமும் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்

-காஷ்மீருக்கும் மத்திய அரசுக்குமான நடுவண் குழு மேற்கண்டவாறு பரிந்துரைத்திருக்கிறது. பல நல்ல அம்சங்களை இந்த அறிக்கை உட்கொண்டிருந்தாலும், 1953க்கு முந்தைய நிலைமை திருப்பித் தரப்பட வேண்டாம்; முதல்வர், கவர்னர் என்ற பெயர்களையே வைத்துக் கொள்ளலாம்; ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைக்கும் விதி 356ஐ மாற்றத் தேவையில்லை; காஷ்மீரின் கவர்னரை இந்திய ஜனாதிபதியே நியமிப்பார்; போன்றவற்றில் முந்தைய நிலை அப்படியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்தும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீரின் பிரிவினை இயக்கங்கள் இப்பரிந்துரையை நிராகரித்துள்ளன.

காஷ்மீரின் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற, அதிகாரம் பற்றி எதுவும் பேசவில்லை. இந்தப் பரிந்துரைகளுக்கான மூவர் குழுவில் காஷ்மீரிகள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த அறிக்கையையும் பாரதீய ஜனதா கடினமாக விமர்சித்திருக்கிறது. இது அதிகப்படியான வார்த்தைகள் கொண்ட அறிக்கை என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி என 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புக்கொண்ட தீர்மானத்தை அறிக்கை பலகீனப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் (PAJK) என்று கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையே ஒரு உளவியல் தடுப்பாக விதி 370 இருப்பதை ஏற்க மறுத்துள்ளது. அந்த விதியை ஒழிப்பதற்குப் பதிலாக அதை நிரந்தரப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

--ஜி.அத்தேஷ்
-tmmkonline