செங்கோட்டை: செங்கோட்டையை
அடுத்த ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாருட்டி அருவிகளில் தமிழக
சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு
பருவமழை துவங்கியதை அடுத்து தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் சாரல் மழை
பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
இதே போல செங்கோட்டையை அடுத்த கேரள பகுதிகளான ஆரியங்காவு பாலருவியிலும்,
அச்சன்கோவில் கும்பாருட்டி அருவியிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
இந்த இரண்டு அருவிகளும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளதால்
ஏராளமான தமிழக சுற்றுலாப் பயணிகள் இந்த 2 அருவிகளுக்கும் குளிக்கச்
செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இவ்விரண்டு
அருவிகளிலும் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கேரள சமூக விரோதிகள்
தொடர்ந்து தாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு
பிரச்சனையை காரணம் காட்டி இப்பகுதி சமூக விரோதிகள் தமிழக சுற்றுலாப்
பயணிகளை தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த 8ம் தேதி
விருதுநகர் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 3 குடும்பத்தைச் சேர்ந்த
சுமார் 30 பேர் பாலருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேரள
பகுதியைச் சேர்ந்த பலர் தமிழக பெண்களை கேலி செய்ததோடு ஆபாசமான முறையில்
அநாகரிகமாக நடந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட தமிழக சுற்றுலாப் பயணிகளை
தாக்கவும் செய்துள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தமிழக
சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் புகார்
தெரிவித்தும் அவர்கள் இதைபற்றி கண்டுகொள்ளாமல் குடும்பத்தோடு குளித்துக
கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அச்சன்கோவில் பகுதியில் உள்ள கும்பாருட்டி பகுதியில்
தமிழகத்தில் குடும்பத்துடன் சென்ற ஒரு பெண் அவரது கணவர் கண் முன்னே
மானபங்கப்படுத்தி அந்த காட்சி இணையதளத்தில் வெளியானது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாலருவியில் தமிழக சுற்றுலாப் பயணிகள்
தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம், பாபநாசம்,
செங்கோட்டை பகுதியில் இயற்கை எழில்சார்ந்த மனதை மயக்கும் ஏராளமான சுற்றுலா
ஸ்தலங்கள் இருந்த போதிலும் பாதுகாப்பு இல்லாத கும்பாருட்டி அருவி, பாலருவி
போன்ற பகுதிகளுக்கு பெண்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என செங்கோட்டை
பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கடந்த ஆண்டே எச்சரித்த போதிலும்
தமிழக சுற்றுலாப் பயணிகள் பாலருவி, கும்பாருட்டி பகுதிக்கு சென்று
அவமானப்படுவது தொடர்கிறது என தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
Posted by: Essak
http://tamil.oneindia.in