ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!
முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.
பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.
இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-http://www.tntj.net/90674.html