புதன், 13 ஜூன், 2012

பெரம்பலூரில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு: கலெக்டர்

பெரம்பலூரில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு: கலெக்டர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக பிறந்த ஆண், பெண் குழந்தைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது:

கணக்கெடுப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 2008-2009ம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 260 ஆகவும், 2009-2010ம் ஆண்டில் 120 ஆகவும், 2010-2011ம் ஆண்டில் 90 ஆகவும் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டில் 2011-2012 இந்த மகப்பேறு இறப்பு விகிதம் 137 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்தபோது பிரசவத்திற்கு பின் ஏற்படும் அதிக இரத்த போக்கு, கர்ப்பம் காரணமாக வரக்கூடிய அதிக இரத்த அழுத்தம், ஆகிய காரணங்களால் தாயமார்கள் இறந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
 
மேலும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2008-09ம் ஆண்டில் 1,000-த்திற்கு 915 ஆகவும், 2009 -10 ஆம் ஆண்டில் 877 ஆகவும், 2010-11ம் ஆண்டில் 871 ஆகவும், 2011-12ம் ஆண்டில் 823 ஆகவும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வந்துள்ளது.
இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது சிசு மரணதத்தில் பிறந்தவுடன் ஏற்படும் மூச்சு திணறல், வயிற்று போக்கு, குறைவான எடை, தாய்ப்பால் ஊட்டும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை காரணங்களாக இருந்துள்ளன.
 
இதனை குறைக்க கடந்த ஓராண்டு காலமாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களாகிய உங்கள் அனைவருக்கும் இணைந்து செயலாற்றவும், கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யவும், பதிவு செய்த நாளிலிருந்தே அவர்களுக்கு உயரத்திற்கு ஏற்ற எடை, சத்தான உணவு வகைகள், பரிசோதனைகள், சிகிச்øகான ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
 
பிரசவத்திற்கு கர்ப்பிணி தாய்மார்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
 
2012 ஏப்ரல் மாதத்தில் மாவட்டத்தில் பிறந்த 341 ஆண் குழந்தைகளுக்கு 305 பெண்குழந்தைகள் பிறந்துள்ளனர். அதாவது ஏப்ரல் மாதத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 894 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 2012 மே மாதத்தில் மாவட்டத்தில் பிறந்த 325 ஆண் குழந்தைகளுக்கு 378 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
 
அதாவது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,163 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். மேலும் 2012 ஏப்ரல், மே மாதங்களில் ஒரே ஒரு கர்ப்பிணித்தாய் மட்டும் கர்ப்பகாலத்தில் இறந்துள்ளார்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீராக இருக்கும் வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும்.
 
கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நிலையை சோதித்து அவர்களின் உடல் நிலைக்கேற்ப ஊட்டச்சத்து உருண்டை, சத்து மாத்திரைகள் உங்கள் கண்முன்னே சாப்பிட செய்ய வேண்டும். அதிக சிரத்தையுடன் கர்ப்பிணி தாய்மார்களை கண்காணித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யவும், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையில் தான் பிரசவம் நடைபெறும் விதத்தில் பணியாற்றவேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
-maalaimalar.com