செவ்வாய், 12 ஜூன், 2012

உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...

 

 

இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. "குழந்தை தொழிலாளர் முறையை" முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ஜூன் பனிரெண்டாம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளியாக தம் வாழ்க்கையை துவங்குகிற குழந்தைக்கும், பள்ளி செல்லும் குழந்தைக்கும் தான் எவ்வளவு வேற்றுமை.

ஒரு குழந்தை புத்தக பையை சுமக்கிறது என்றால் மற்றொரு குழந்தை - ஏதோ ஒரு தொழிலுக்கான உபகரணத்தை தூக்குகிறது. குழந்தை பருவம், குழந்தை பருவமாக இருப்பதில்லை குழந்தை தொழிலாளர்களுக்கு என்பதே உண்மை.உலகில் இருபத்தியொரு கோடி சிறார்கள், குழந்தை தொழிலாளர்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வல்லரசு கனவு காணும் தேசத்திலும் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தேசிய அவமானம் என்றால் மிகையில்லை.

 உலக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பனிரெண்டு சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பிரச்னை, எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், குறைந்த ஊதியத்தில், விடுமுறை இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உலகெங்கும் பதினொரு கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்தாண்டில் தமிழகத்தில் பெருமளவு குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடிந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஒரளவுக்கு பெற்றோர்களுக்கு - தம் பிள்ளைகள் நல்ல வேலைக்கு போக வேண்டும், "படிக்காமல் தம்மை போல கஷ்டப்படக்கூடாது" என்கிற விழிப்புணர்வை பெற்றிருக்கின்றனர். மேலும், பெருமளவு அதில் அரசின் பங்குள்ளது. குழந்தை தொழிலாளரை வைத்திருக்கும் நிறுவனத்துக்கு பெருமளவு அபராதம், தண்டனையும் விதிக்கப்படும் என்கிற சட்டமே குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை ஒரளவு கட்டுக்குள் வைத்துள்ளது.

முழுமையாக ஒழிக்கப்பட பெற்றோர்களுக்கு இன்னும், இன்னும் நிறைய விழிப்புணர்வை கற்று தர வேண்டி உள்ளது. மேலும் நம் சமூகம் பரம்பரை தொழில் முறையை கொண்டிருந்ததால் - வீட்டில் வைத்தே செய்யும் பல்வேறு தொழில்களில், தம் பிள்ளைகளை குழந்தை தொழிலாளர்களாக ஆக்குகிறோம், அவர்களின் கல்வியை பறிக்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல், "வருமானம் ஒன்றே குறிக்கோளாக" பல பெற்றோர்கள் செயல் பட்டிருக்கின்றனர்.


இப்போது நிலைமை தமிழர்களிடம் மேம்பட்டிருந்தாலும் - பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வரும் பிற மாநிலத்தவர் பிள்ளைகள் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. பத்து வயதில் குழந்தை தொழிலாளராய் தம் வாழ்க்கையை துவங்கும் குழந்தை - முப்பத்தி ஐந்து வயதாகும் போது, சகலராலும் கசக்கி சக்கையாக பிழியப்பட்டு - வேலை பார்க்கவே விருப்பமில்லாமல் போய்விடுகிறது. கூடவே மது போன்ற கெட்டப்பழக்கங்கள் சோம்பேறியாக்க - விளைவு... தம் பிள்ளைகளை குழந்தை தொழிலாளர்களாக்க முனையும் அவலம்.

தாம் குழந்தை தொழிலாளர்களாய் இருந்து கஷ்டப்பட்டதை - அந்த தந்தை உள்ளம் மறந்து, தம் குழந்தையை தாம் விழுந்த அதே படுகுழியில் தள்ளுவது தான் கொடுமை. படிக்கின்ற குழந்தை தம் இருபத்தி இரண்டாவது வயதில் தான் வேலைக்கே செல்லும். ஆனால் குழந்தை தொழிலாள குழந்தை இருபத்தி இரண்டு வயசில் வேலை மீதான ஆர்வத்தையே இழக்கும். குழந்தைகளினால் கிடைக்கும் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

சம்பாதிக்கின்ற குழந்தை மிக சுலபமாக கெட்டு போக வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் வருமானம் தடைப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் - தங்களின் பிள்ளைகளின் தவறை கண்டும் காணாமல் இருப்பதனால் - அது மென்மேலும் சிக்கலை தரக்கூடியவையாக உள்ளது.

"எது செய்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்" என்பதே மிக முக்கியமான கேள்வி... அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். அரசால் கிடைக்க பெறும் வசதியினை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

குடி போன்ற தீங்கை அரசே கடைப்பரப்பினால் - எந்த மக்கள் நலத்திட்டமும் மக்களை உருப்படியாக சென்றடையாது. உண்மையிலேயே குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க அரசு விரும்பினால் - வேறு சில வற்றையும் அரசு ஒழித்தாக வேண்டும். இன்னும் முழுவீச்சில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு உறுதி எடுக்க வேண்டும். காரணம், "குழந்தை தொழிலாளர் முறை இருப்பது தேசிய அவமானம்"


-http://oosssai.blogspot.com/