திங்கள், 9 ஜூலை, 2012

சிறுபான்மையின மாணவியருக்கு கல்வி உதவித் தொகை:

                  11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இக்கல்வி உதவித் தொகை மூலம் கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, உறைவிட கட்டணங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 767 சிறுபான்மையின மாணவியர்களுக்கு (இஸ்லாம்-366, கிறிஸ்தவர்-399, சீக்கியர்-1, புத்தம்-1) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
உதவித் தொகை பெற தகுதிகள்: மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, நடப்பாண்டில் 2012-2013-ல் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள் இணைத்து பயிலும் கல்வி நிலையத்தில் 20.9.2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர்கள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பெற்று சரிபார்த்து, இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து புதுதில்லியில் உள்ள அலுவலகத்திற்கு 30.9.2012 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
 
இதற்கான விவரங்களை http://maef.nic.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.