புதன், 11 ஜூலை, 2012

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.பி, டிஎஸ்பி நியமிக்கப்படுவார்களா மக்கள் எதிர்பார்ப்பு

                   பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்பி, டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்று சென்றுள்ளனர். இதனால்  குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், மங்களமேடு, பாடாலூர், அரும்பாவூர், மருவத்தூர், டி.களத்தூர், கை.களத்தூர் என 9 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதுதவிர ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த 9 போலீஸ் ஸ்டேஷன்களும் பெரம்பலூர் டிஎஸ்பி சரகத்தில் வருகின்றன. இதில் பெரம்பலூர், குன்னம், பாடாலூர், அரும்பாவூர், மங்களமேடு ஆகியவை இன்ஸ்பெக்டர் தலைமையிலும், மற்ற 3 போலீஸ் ஸ்டேஷன்களும் சப்இன்ஸ்பெக்டர் தலைமையிலும் இயங்குகின்றன.

பெரம்பலூர் எஸ்பியாக இருந்த ரூபேஸ்குமார் மீனா கடந்த 2 மாதத்துக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு வேறு யாரும் எஸ்பியாக நியமிக்கப்படாத நிலையில் திருச்சி எஸ்பி லலிதா லட்சுமிக்கு பெரம்பலூர் எஸ்பி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் அடிக்கடி பெரம்பலூர் வந்து செல்ல முடியாது என்பதால் டிஎஸ்பியாக உள்ள சிவக்குமார் தான் பொறுப்புகளை கவனித்து வந்தார். அவரும் கடந்த 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் திருச்சி குற்றப்பதிவேடுகள் பிரிவு டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் பெரம்பலூர் டிஎஸ்பி பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பெரம்பலூர் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விவேகானந்தன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்கும், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் சென்றுவிட்டனர்.

மேலும் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மயில்சாமி திருச்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டும், இங்கு நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் சர்புதீன் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

இதனால் மயில்சாமி பெரம்பலூரிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அத்துடன் குன்னத்தில் பெண் தற்கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் சுப்பையன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதால், அந்த பொறுப்பையும் மயில்சாமியே கவனித்து வருகிறார். மேலும் மங்களமேடு இன்ஸ்பெக்டர் செல்வம், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் பாடாலூர் சோலைமுத்து, அரும்பாவூர் தங்கராசு ஆகியோர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மாவட்டத்தில் எஸ்பி முதல் இன்ஸ்பெக்டர் வரை முக்கிய பணியிடங்கள் அனைத்துக்கும் பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் மேலும் அதிகரித்துவிடும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே பெரம்பலூருக்கு எஸ்பி, டிஎஸ்பிக்களை நியமித்து அரசு உத்தரவிட வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-dinakaran