திங்கள், 9 ஜூலை, 2012

சீக்கிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நோக்கம்!!



                                  இந்தியாவிற்கு எதிராக இந்தியாவிற்கு உள்ளும் இந்தியாவிற்கு வெளியேயும் செயல் படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் .அதில் முக்கியமானது பப்பர் கல்சா .பயங்கரமான தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றும் தீவிரவாத எண்ணம் கொண்ட இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் வெளி நாட்டு தீவிரவாத இயங்கங்களோடு சேர்ந்து இந்தியார்விற்கு எதிராக கைகோர்த்து இருக்கிறார்கள் என்று வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்தியாவை எச்சரித்து உள்ளனர் .

இந்தியர்களான சீக்கியர்கள் தம் நாட்டு சொந்த கொடியை எரிக்கும் அளவிற்கு அவர்களுக்கு இன வெறியை ஏற்றி இந்த தீவிரவாத அமைப்புகள் மூளை சலவை செய்து வருகின்றன .இந்தியாவில் பாகிஸ்தான் கொடியை எரித்தும் பாகிஸ்தானில் இந்தியா கொடியை எரித்தும் நாம் மீடியாக்களில் பார்த்து இருப்போம் சொந்த நாட்டில் சொந்த கொடியை எரிக்கும் இவர்களை பற்றி என்றாவது அக்கறையோடு செய்திகள் வெளியிட்டதுண்டா? இந்த செய்திகளை நம் செய்தி நிறுவனங்கள் அரசியல் காரணங்களுக்காக இருட்டடிப்பு செய்கின்றனர்.

இந்தியப் பிரிவினை நடந்தபோது, மத அடிப்படையில் ஒருங்கிணைந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுக்கும், இன்னொரு பகுதி பாகிஸ்தானுக்கும் போனது.

ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்கள் அப்போது பெரும்பான்மை வகுப்பினராக இல்லை. இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தனர்.

பஞ்சாப் பிரதேசத்தில் இருந்த முக்கிய மூன்று மதத்தினரான இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்களில் லூதியானா மாவட்டத்தில் மட்டும்தான் சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.

இந்த நிலையில் பிரிவினைக்காக இந்துக்களையும், சீக்கியர்களையும் ஒரே குழுவாக அறிவித்தது வெள்ளையர் அரசு.1909ம் ஆண்டு மின்டோ - மார்லி சீர்திருத்த குழுவிடம் இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் பல்வேறு கோரிக்கைளை அளித்தனர். அப்போது முஸ்லீம்கள் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்.

அப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தான் என்ற நாட்டை முஸ்லீம்களுக்காக உருவாக்கினால், அதே பாணியில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கியர்கள் மின்டோ - மார்லி கமிட்டியிடம் முன்வைத்தனர்.

இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகிய மூன்று முக்கிய மதக் குழுக்களுடன் வெள்ளையர் அரசு நீண்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

இந்த நிலையில் சீக்கியர்களை சாந்தப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக அறிவித்தார் மகாத்மா காந்தி.

1946ம் ஆண்டு நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது, காந்தியின் உறுதிமொழியை முன்மொழிந்தார் நேரு. மேலும், சீக்கிய மக்கள் தங்களது பகுதியில் சுயாட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும் கூறினார் நேரு.

இந்த சமயத்தில் 1947ம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்திய அரசின் மூத்த அதிகாரியாக இருந்து வந்த கபூர் சிங் என்பவர் ஊழல் புகார் சாட்டப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் அவர் துண்டுப் பிரசுரம் ஒன்றை அச்சடித்து பஞ்சாப் முழுவதும் விநியோகித்தார்.

அதில், அப்போதைய பஞ்சாப் ஆளுநர் சந்துலால் திரிவேதி மூலமாக, பிரதமர் நேருவும், துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில், சீக்கியர்களை குற்றப் பரம்பரையினராக கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல ஜலந்தர் லயல்பூர் கல்சா கல்லூரி முன்னாள் முதல்வர் பிரீத்தம் சிங் கில் என்பவரும், சீக்கியர்களையும், பஞ்சாபி மொழியையும், கலாச்சாரத்தையும், இனத்தையும் அழிக்க இந்துக்கள் பெரும் சதித் திட்டம் தீட்டி நடந்து கொண்டனர் என்று பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படித்தான் காலிஸ்தான் கோரிக்கை ஆரம்பத்தில் எழுந்து, நடுவில் தளர்ந்து, பின்னர் மீண்டும் வீறு கொண்டெழத் தொடங்கியது.

பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாபி பேசும் மக்கள் அதிகம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிளை உள்ளடக்கிய சீக்கிய சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

70களிலும், 80களிலும் இது மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. பின்னாளில் அது தீவிரவாத இயக்கமாக மாறிப் போனது.1971ம் ஆண்டு காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தீவிரமாக முழங்கி வந்தவர்களில் முக்கியமானவரான ஜகஜித் சிங் செளஹான், அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு நியூயார்க் டைம்ஸ் இதழில் காலிஸ்தான் நாடு உருவாக்கப்படவிருப்பதாக பெரிய விளம்பரம் கொடுத்தார். இதையடுத்து தனி காலிஸ்தான் நாடு போராட்டத்துக்காக நிதிகள் குவியத் தொடங்கின.

1980ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி இந்திரா காந்தியை சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அனந்த்பூர் சாஹிப்பில், தேசிய காலிஸ்தான் கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

அதன் தலைவராக தன்னையும், பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்துவையும் அறிவித்தார். 1980ம் ஆண்டு மே மாதம் செளஹான் லண்டன் சென்றார். அங்கு காலிஸ்தான் உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் வைத்து சந்து அறிவித்தார். அத்தோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு, ஸ்டாம்புகள் ஆகியவற்றையும் வெளியிட்டார் சந்து.

இருப்பினும் செளகான், சந்து மீதோ, அவர்களது அமைப்பின் மீதோ அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸின் செயலற்ற போக்கை அகாலிதள தலைவர் லோங்கோவால் கண்டித்தார்.இந்த நிலையில்தான் காலிஸ்தான் போராட்டக்காரர்கள் 80களில் தீவிரவாத செயல்களில் இறங்கினர். இதனால் பஞ்சாபில் ராணுவம் நுழைந்தது. தினசரி குண்டுவெடிப்புகள், கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள், ஊரடங்கு உத்தரவுகள் தொடர் கதையாகின.

இந்த நிலையில்தான் 1984ம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிந்தரன்வாலேயும், ஷாபேக் சிங்கும் பெருமளவில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலேயை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் இந்திரா காந்தி.

அதன்படி, லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் தலைமையிலான ராணுவப் படை உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் பிந்தரன்வாலே சுட்டுக் கொல்லப்பட்டார். அது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள்.

இந்த சம்பவம் இந்திரா காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் சீக்கியர்கள் கடும் கோபம் கொள்ள வைத்தது.ராணுவ ரீதியாக பொற்கோவில் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தாலும், அரசியல் ரீதியாக அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியைக் கொடுத்தது. சீக்கியர்களின் மிகப் புனிதமான இடம் பொற்கோவில். அந்த கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதும், அதிலும் சீக்கியர்கள் தங்களது புனிதப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அனுப்பியதும், பல நூறு பேரின் ரத்தம் பொற்கோவிலில் சிந்தச் செய்ததும், பொற்கோவிலின் பல பகுதிகள் சேதமடைந்ததும் இந்திரா காந்தியின் மீது சீக்கியர்கள் கடும் கோபமடைய வைத்தது.

சீக்கியர்களின் மனதையும், அவர்களின் புனிதத் தலத்தையும் இந்திரா காந்தி களங்கப்படுத்தி விட்டதாக குமுறல்கள் வெடித்ன.இந்த நிலையில்தான் சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத வன்முறை சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த சீக்கிய தீவிரவாதம் 1993ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில், பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்ற பப்பர் கல்சா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இன்னும் கூட தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் 93க்குப் பிறகு பெரிய அளவிலான தீவிரவாத செயல்களில் அவற்றால் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அங்கு தீவிரவாதம் தலை தூக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி மத்திய அரசையும், பஞ்சாபையும் கவலை கொள்ளச் செய்துள்ளன.