சனி, 15 செப்டம்பர், 2012

ஹஜ் பயணத்தில் வி.ஐ.பி. கோட்டா ரத்து : கூடுதல் பயணிகளுக்கு வாய்ப்பு!


                                                           இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 25ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டிகள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சீட்கள் வரை வி.ஐ.பி.களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த கோட்டாவில் சில வி.ஐ.பி.க்கள்தான் ஹஜ் பயணம் செல்கின்றனர். பெரும்பாலான வி.ஐ.பி.க்கள் இந்த சீட்களை பணம் வாங்கிக் கொண்டு விற்கின்றனர். சிலர் ஹஜ் பயணிகளிடம் போய் லஞ்சம் கேட்பதா? எனக் கருதி சும்மாவே சிபாரிசுக் கடிதம் கொடுக்கின்றனர்.

இந்த வி.ஐ.பி. கோட்டாவை உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. அதனால் இனிமேல் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், ஹஜ் பயணத்திற்கான சீட்டை விற்று காசு பார்க்க முடியாது. இதற்காக உச்சநீதி மன்றத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரத்து செய்யப்பட்ட இந்த வி.ஐ.பி.க்களின் கோட்டா குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதனால் கூடுதல் பயணிகள் ஹஜ் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.  

எனவே ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆவலில் தனியார் ஹஜ் சர்வீஸ்களிடம் பல லட்சம் கொட்டிக் கொடுத்து மனம் நோவதை தவிர்த்து, ஹஜ் கமிட்டி குழுக்களில் இடம் கிடைத்தால் ஹஜ் செய்யுங்கள். இல்லையேல் ஹஜ் பயணத்தை அடுத்தாண்டு தள்ளிப் போடுங்கள். இதை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். மூன்று ஆண்டு வரை தொடர்ந்து விண்ணப்பிப்பவருக்கு ஹஜ் கமிட்டி கட்டாயம் சீட் கொடுத்து விடுகிறது. இதை ஹஜ் பயணிகள் புரிந்து கொண்டு பணத்தை இழக்காமல் நடந்து கொள்வார்களா?