வியாழன், 13 செப்டம்பர், 2012

25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை - இந்தியா நீதித்துறை




                                                டிசம்பர் 2, 1984 போபாலில், மக்கள் இரவு உணவருந்திவிட்டு, எதிர்காலக் கனவுகளுடன் உறங்கச் சென்றார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தங்களுக்கு நேரப்போகும் பேராபத்தால் மீளா உறக்கத்தில் ஆழப்போகிறோம் என நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. நல்லிரவுக்கு அருகாமையில் கடுமையான இருமல் மற்றும் கண் எரிச்சல் எற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து அடித்துக்கொண்டு வெளியேறினர். ஊரே அலறியடித்துக்கொண்டு திக்குத் தெரியாமல் ஓடுவதைக் கண்டு மக்கள் திகைத்தனர். ஓர் விஷவாயு அருகிலிருந்த யூனியன் கார்பைடு கம்பெனியிலிருந்து கொல்ல வந்தது. பொழுது விடிந்தபோது விஷவாயு 5,000 உயிர்களைப் பலிகொண்டிருந்தது. அக்கொடிய வாயுவின் பெயர் மெதில் அய்சோ சயனைடு.

உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகம் அலறியது. மொத்தத்தில் 25,000 பேர் இறந்தனர். இலட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரிசெய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் செய்யப்பட்டது. விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதிமன்றங்கள் தங்களுக்கு விரைவில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.

சூன் 7 அன்று அளித்திருக்கும் தீர்ப்பு பேரதிர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. கொடிய குற்றங்களுக்கு குறைந்த தண்டனைகள் வழங்கியது மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. 25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. நம்முடைய ஊர்களில் உணர்ச்சி வசப்பட்டு செய்யப்படும் கொலைக்கு கூட ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தங்களின் இலாபவெறியால், அலட்சியத்தால் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்ற நிறுவன முதலாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை. ஏனெனில் மக்களைவிட பன்னாட்டு முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பது உறுதியாகிறது. இதில் தண்டனை பெற்றவர்களுக்கு உடனே பிணை கிடைத்ததால் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டில் நீதி, நியாயம் என்ற ஏதாவது இருக்கிறதா என நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.

போபால் பேரழிவினைப் பற்றி சரியான புரிதல் எற்பட நாம் அந்நிறுவனத்தைப் பற்றியும், அதன் செயல்படும் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட், 1969-இல் போபாலில் 67 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை தொடங்கியது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் செயற்கை உரங்களைத் தயாரித்து விவசாய விளை நிலங்களை, மலடான நிலைக்கு மாற்றிய நிறுவனங்களில் இது முக்கியமானது. 1979-இலிருந்து மிகவும் நச்சுத்தன்மையுடைய வாயுவான மெதில் அய்சோ சயனைடைத் தயாரித்தது. பல தொழில்நுட்பக் கோளாறுகள் அத்தொழிற்சாலையில் இருந்தாகப் பலர் கூறியும், அந்நிறுவனம் அதைக் கண்டுகொள்ளவில்லை. 1983 மார்ச் 4-இல் அதாவது அக்கொடிய சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சமூக அமைப்பு தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்று அந்நிறுவனத்தின் செயல் மேலாளர் முகுந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏப்ரல் 28-இல் அவர் அனைத்து பாதுகாப்பும் போதுமானதாக உள்ளதென பதில் தந்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே அக்கொடிய விபத்து நடைபெற்றது.

போபால் பேரழிவின்போது அதன் தலைமை இயக்குநர் ஆண்டர்சன் டிசம்பர் 7 அன்று கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் நேர் நிற்பேன் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர்தான் 25,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டான். அன்றைய போபால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அரசுக் காரில் ஆண்டர்சனை தப்புவிக்க விமானம் நிலையம் வரை சென்று வழியனுப்பினர். இதை ஒரு பிரான்சு ஊடகம் படம் எடுத்த பிறகே வெளியுலகத்திற்குத் தரிய வந்தது. பின்னர் ஆண்டர்சன் சகல அரசு மரியாதையுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றான். அப்பொழுதே இந்தியாவை ஆண்ட காங்கிரசு அரசு, கொலைகாரன் ஆண்டர்சனுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது. எதிர்கட்சிகளும் எதிப்பதுபோல் மக்களிடம் பாசாங்கு செய்துகொண்டே பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலனாகவே இருக்க விரும்புகின்றன. இப்போது வீரவேசம் போடும் பா.ஜ.க. தன் ஆட்சிக்காலத்தில் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வந்து தண்டனை வாங்கித்தர விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆண்டர்சனுடைய வழக்கறிஞர் சார்ந்திருக்கும் சட்டக்குழுமத்தின் மற்றொரு வழக்கறிஞரிடம் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வரமுடியுமா என வல்லுனர் கருத்து கேட்டது. அதற்கு அந்த வழக்கறிஞர் முடியாது என கருத்து கூறியவுடன் ஆண்டர்சன் வழக்கைத் தூக்கி குப்பையில் வீசியது பா.ஜ.க.

மக்களிடம் போபால் பிரச்சனை பெரிய அளவில் வெடித்த பின்பு இப்பொழுது அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டர்சனை இந்தியா கொணர்டுவந்து தண்டிக்க வேண்டுமென முழக்கம் போடுகின்றனர். இது சரியானதுதான். ஆனால் இந்த விசயத்தில் எந்தக் கட்சிகளும் மனச்சாட்சியுடன் செயல்படவில்லை. ஏற்கனவே ஆண்டர்சனுக்கு 90 வயது ஆகிவிட்டது. அமெரிக்கா இன்னும் அவனை அனுப்பமாட்டேன் என அடாவடி செய்கிறது. அப்படியே இந்திய மக்களின் கோபத்தின் காரணமாக கொண்டுவந்தாலும் வழக்கு விசாரணை என்ற பெயரில் காலந்தள்ளி அவனாகவே வாழ்க்கை இன்பங்களை அனுபவித்துவிட்டு இறந்தபிறகு வழக்கை முடித்துக் கொள்வது தான் இந்த அரசியல் கட்சிகளின் திட்டம்!



 - சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? (facebook)