ஞாயிறு, 7 அக்டோபர், 2012

தமிழகத்திற்கு காவிரி நீர் தராவிட்டால், கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்! - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை




                                           மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

தமிழகத்திற்கு காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகா, இதுதொடர்பான இந்திய பிரதமரின் வேண்டுகோளையும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இந்திய ஒருமைப்பாட்டை அவமதித்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படிவதுபோல் காட்டிக்கொண்டு காவிரியில் இருந்து தண்ணீர் விட்டாலும் கூட வறட்சியால் வாடும் காவிரி பாசன விவசாயிகளின் துன்பத்தை அதிகப்படுத்தி தமிழ்நாட்டில் உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்த நினைக்கும் கர்நாடகா அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சுயநலமும் கொடுமதியும் தமிழக மக்களையும் ஒன்றுபட்ட இந்திய நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழத்திற்கு தண்ணீர் தரவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்வோம் என்ற கர்நாடக முதல்வரின் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை ஊக்கப்படுத்தும் கன்னட வெறியர்களின் போராட்டங்கள் கர்நாடகா வாழ் தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனைத் தடுக்கத் தவறியதோடு மறைமுகமாக, போராட்டங்களை ஊக்கப்படுத்தும் கர்நாடக அரசையும், தமிழர்களை ஏமாற்றி இரட்டை வேடம் போடும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் 16 மணி நேரத்திற்கும் அதிகமான அளவு மின்வெட்டால் தமிழக மக்கள் துன்பத்தில் வாடும் பரிதாப நிலையிலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு விரோதமாக காவிரி தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகாவின் தேசவிரோதப் போக்கு தொடர்ந்தால்... கர்நாடகாவுக்கான மின்சாரத்தை நிறுத்தக்கோரி நெய்வேலி அனல் மின் நிலையத்தினை முற்றுகையிட்டு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தவும் மனிதநேய மக்கள் கட்சி தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.