மின் தடையால் சீரான குடி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரும் போது அதனை பிடிப்பதில் ஏற்படும் போட்டியால் ஒரு பெண் கடித்து குதறப்பட்ட சம்பவம் வேப்பந்தட்டை அருகே நடந்துள்ளது. பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா (வயது 50). இவர் அங்குள்ள ஒரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
அப்போது அங்கு கூட்டமாக இருந்தது. யசோதா தண்ணீர் பிடிக்க குடத்தை வைத்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு (வயது 42) என்ற பெண்ணும் வந்து குடத்தை வைத்தார். இதில் நான்தான் முதலில் வந்தேன் என்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் யசோதைக்கு ஆதரவாக அவரது மகள் செல்வி, மகன் பெரிய சாமி ஆகியோர் வந்தனர்.
அதுபோல சின்ன பொண்ணுக்கு ஆதரவாக அவரது மகள் வாசுகி கணவன் ஆறுமுகம் ஆகியோர் வந்தனர். இந்த தகராறில் மற்றவர்களும் தண்ணீர் பிடிக்க முடியாமல் தவித்தனர். இந்த நேரத்தில் யசோதாவின் உடலில் பல இடங்களில் சின்னபொண்ணு கடித்து குதறினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அதை தடுத்த யசோதாவின் மகள் செல்வியும் காயம் அடைந்தார். இருவரும் உடனடியாக வேப்பந்தட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வி.களத்தூர் போலீஷ்
சப்- இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ விசாரணை நடத்தி சின்ன பொண்ணு, அவரது மகள் வாசுகி, மற்றும் மருமகன் ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தார்.